tamilnadu

img

முஸ்லிம் இளைஞர் தப்ரேஸ் அன்சாரிக்கு அநீதி...கொலை குற்றச்சாட்டிலிருந்து 13 பேரும் விடுவிப்பு

ராஞ்சி:
முஸ்லிம் இளைஞர் தப்ரேஸ் அன்சாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை, சாதாரண வழக்காக மாற்றி, இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த 13 பேரையும் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து ஜார்க்கண்ட் பாஜக அரசு விடுவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரேஸ் அன்சாரி (24). இவர் கடந்த ஜூன் 18-ஆம்தேதி தனது நண்பர்களுடன் ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போது தப்ரேஸ் அன்சாரியை 11 பேர் கொண்டகும்பல் வழிமறித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு, கடுமையாகத் தாக்கியது. 

சுமார் 7 மணி நேரம், விளக்குக் கம்பத்தில் கட்டிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இளைஞர் தப்ரேஸ் இறந்து போனார். அன்சாரி மீது 13 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூரமானத் தாக்குதல் வீடியோவாக வெளியாகி, நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியே இச்சம்பவத்தைக் கண்டிக்க வேண்டிய அளவிற்கு, நெருக்கடியும் உருவானது. இந்நிலையில், அன்சாரி மரணம் தொடர்பான உடற்கூராய்வு அறிக்கையை, கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறையினர், ‘தப்ரேஸ் அன்சாரி தாக்குதலால் இறக்கவில்லை; மன உளைச்சலால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார்’ என்று கூறியிருந்தனர். இது, அன்சாரி குடும்பத்தினரையும், மனித உரிமை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தற்போது, அன்சாரி மீது தாக்குதல் நடத்தியதாக, ஐபிசி 302-ஆவது பிரிவின் கீழ், 13 பேர் மீது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டை அடியோடு ரத்து செய்து, ஜார்க்கண்டின் சராய்கேலா கர்ஸாவன் போலீசார் மேலும் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

;